Saturday, September 16, 2006

உயிர் நடுக்கம்

பூக்களின் விரிதலாய்
முகம்
பார்க்கத் தொடங்கியபோது
இதயத்தின் துளைகளில்
புகுந்த காற்று
மீட்டும்
புல்லங்குழலாய்
அதிரத்தொடங்கியது
குருதியோட்டத்தின்
மொத்தமண்டலமும்!

வண்ணங்கள்
ஒட்டும்
வண்ணத்துப்பூச்சியின்
இறகுகள் போல்
நினைவுக் கதிர்கள்
சுடும் சுவடுகள்
கனவுகளின்
ஒவ்வொரு
இடுக்குகளிலும்!

மினுங்கிப்போகும்
மின்மினி
தெளித்துப்போகும்
கண்களின் இதம்
தண்ணீர் குளத்தில்
வைத்த கால்
பருகும்
குளிர்மையின் வெம்மை!

பூக்களின் காம்புகள்
உதிர்க்கும்
மகரந்தம்
தடவிச் செல்லும்
காற்று பட்டு
தலையாட்டும்
காட்டாற்றோர
நாணல்களின் சிலிர்க்கும்
முதுகுத்தண்டு
வளைத்தொடிக்கும்
இதழ்களின் ஓரத்தில்
உதிர்ந்தோடும்
புன்னகை!

வளைவான அலைகளின்
வசம்
வாசம் கொள்ளும்
படகின் நிலையாய்
இதழ்களின் வளைவான
ஓரத்தில்
ஒட்டிக்கொண்ட
ஒரு துளி சிவப்பு
மச்சம்
உதடுகளுக்கிடையில்
கடிபடும்போது
கண்களில் வீழ்ந்த
மண்துகளின்
நெருடலாய்
நடுங்கித்தான்
போகிறது
உயிர்!

1 Comments:

At 11:12 PM, Anonymous Anonymous said...

hai murali,
I took a long gasp after reading u'r poem, indeed it's all about LIFE,larger than life.

 

Post a Comment

<< Home