ஒரு பூவின் வாசம்
முன்பெல்லாம் நீ அப்படிப்
பார்த்ததில்லை.
இப்போது மட்டுமென்ன
என்னுள்
ஏதாவது
புதியவன் கிளர்ந்திருக்கிறானா?
நீ
பார்க்கும் போது
என்னுள் ஒரு வெடவெடப்பு
பாதங்களிலிருந்து
மூளைவரை
கூச்ச ஊசி.
உன்னை
அவ்வப்போது
பார்க்க நேரிடும்போது
பருவத்தின்
குறுகுறுப்பு
என்னில்…
ஓரக்கண்ணால் நீ பார்ப்பதும் சுகம்
ஒழுங்காய் நீ நடப்பதும் சுகம்
தெருவில் விழிகள் மோதிக்கொள்வதும் சுகம்
தென்றலில் முடிகள் கலைவதும் சுகம்
புதையலை புடவை சுமப்பதும் சுகம்
பூக்களை காம்பு தாங்கியிருப்பதும் சுகம்
தொடாமல் வேண்டுமென்றே தொடுவதும் சுகம்
படாமல் வேண்டுமென்றெ படுவதும் சுகம்
இருவரும் ஒரே நேரத்தில்
முகம் நோக்குவதிலும் கண் தாழ்த்துவதிலும்
எனக்கு வெட்கமாய் இருக்கின்றது.
தூரத்தில் நீ பார்க்காமல் பார்க்கும்போது
என்னுள் நான்
இதயத்தின்
மென்மையான பிரதேசங்களில்!
ஏதோ ஒரு வித மோனம், கலக்கம்.
ஒருநாள் கூட இப்படியானதில்லை.
ஒவ்வொரு நாளும்
உள்ளப் பதைபதைப்பு
உன்னை பார்க்கவேண்டுமென்று
ஓர் உற்சாகம்
உன் முகம் என் கண்ணில் நிழலாடும்போது!...
(செப்டம்பர் 1997)
0 Comments:
Post a Comment
<< Home