விரிசல் விழுந்த வானம்
கண்களில் கொள்ளை
மின்னல் தெளித்து
கன்னங்கள் சிவக்க
முத்தங்கள் கொடுத்து
காதல் சொன்னாய்!
கனவிலா! இல்லை
நிஜமாய் தான்.
என் வானத்தின் அந்தப்புரத்தில்
மழை பெய்த சந்தோசம்!
சொல்லும்போது குவிந்த உன்
உதடுகளின் நளினம்
என் நினைவுகளில் என்றுமே
மறக்க முடியாத புதினம்
உனைப் பார்க்க வரும்போது
ஏற்பட்ட காதலின் சலனம்
பார்த்த பின்பு அடங்கிப்போகும்
முகத்தினில் இரவின் மெளனம்
தலைசாய்த்து கண்கள் மூடி
கொடுத்திடும் உதட்டு முத்தம்
தலைசாய்ந்து போனாலும்
கண்ணடிக்கும் அதன் சத்தம்
சேலைகட்டி இடைசாய்த்து
என்முன் நடந்த நாட்கள்
என் வாழ்க்கையின் மறக்க முடியாத
வண்ணத்துப்பூச்சி நாட்கள்
திருவிழாவாய் உலாவந்த
நம் காதலுக்கு உணர்வளித்தாய் (உன்)
திருமணத் திராவகம்
ஊற்றியல்லவா என் உயிர்பறித்தாய்!
நாள்பார்த்து நான் பார்த்த நாட்காட்டியின்
நாள் பக்கங்களை எனக்கு முன்பே
கிழித்துவிட்டாய்!
என் வாழ்க்கையின் அத்தியாயங்களுக்கு
அர்த்தம் தந்த நீ ஏன்
அவசரமாய் அழித்துவிட்டாய்!
என் வானத்தில் பூக்க
இன்னொரு பூவுமில்லை!
என் கவனத்தில் வருவதற்கு
இன்னொரு பெண்ணுமில்லை!
என் வானம் கண்ணீரில்
நனைந்து போனது!
உன் நினைவினால்
வறண்டு போனது!
நீயில்லாததால்
விரிசல் விழுந்த வானமாய்
இருண்டு போனது.
என் வண்ணத்துப்பூச்சி நாட்கள் போதும்
என் வாழ்க்கையின் அந்திமம் வரைக்கும்!
0 Comments:
Post a Comment
<< Home