Friday, September 22, 2006

செருப்புகள்

நரிக்கல்பட்டி சந்தையில தோலு வாங்கி
நாடாரு கடையில கவுறு வாங்கீலையே
"சர்ரக் சர்ரக்" சத்தந்தேந் மனசுக்குள்ளே!

ஊசிக்கு கூரு புடிக்க மாட்டுக்கொழுப்பு
தீந்திருச்சுன்னு உக்காந்தேந்!
நல்ல வேள சேதி வந்துச்சு
நாயக்கரு செவல செத்துப் போச்சுன்னு!

தோலுக்கு தோலாச்சு!
சட்டி நெறைய கறியுமாச்சு!
கொழம்போட சோறு துன்னுட்டு உக்காந்தா
கண்ணு காதெல்லா(ம்)
சத்தந்தே(ந்)!
"சர்ரக் சர்ரக்"!

காலுக்கு அளவெடுத்து
கணக்கா தோலுபோட்டு
மேலுக்கு அரிக்காத
ரத்த கலரு செருப்பு!

டயரு மேல டயரு வெச்சு
நாடாரு கட நூலு மேல
நூலு போட்டு மச்சூடு போலச்செருப்பு!

செஞ்சுட்டு போட்டு பாக்கீல
செவல நாயக்கரு வந்தாரு. என்றா!
வேலா.....ஆ செருப்பு நல்லாருக்கு
நாந்தொட்டுட்டு போறேன்னாரு.

செருப்போட அவரு போகீல
கூடவே எம் மனசும்
"சர்ரக் சர்ரக்" சத்தத்தோட!

(பிப்ரவரி 1998)

2 Comments:

At 2:58 AM, Blogger Anand said...

இன்னும், இன்னும் எத்தனையோ வேலன்கள், செருப்பு மட்டுமல்ல தன் வாழ்வில் நிறைய விசயங்களை இழந்து கொண்டுதானிருக்கிறார்கள். நல்ல செருப்படி முரளி.

 
At 4:09 AM, Anonymous Anonymous said...

அன்பின் முரளி
தன்னுடைய மாட்டைத் தான் தோலுரித்து செருப்பாக மாறியது என நாய்க்கருக்கு தெரியுமா?

வேலன் அதைச் சொல்லியிருக்கலாம்.

பின்னர் நாய்க்கருக்கும் கேட்டிருக்கும்
சர்ரக்... சர்ர்ர்ரக்.

தொடரட்டும் கலப்பை முனை கவிதைகள்

மணிகண்டன்

 

Post a Comment

<< Home