Wednesday, May 23, 2007

பிடிக்கும் என்பதால் பிடிக்கும்

வெய்யிலோடு பெய்யும் மழையில்
நனைந்திருப்பதும் பிடிக்கும்

வெண்ணிலவோடு வழியும் இரவில்
விழித்திருப்பதும் பிடிக்கும்

கள்ளிப்பூக்களைப் பார்த்துக் கொண்டே
கவிதை படிப்பதும் பிடிக்கும்

கண்களை திறந்து கொண்டே
கனவு காண்பதும் பிடிக்கும்

இமைகளின் முடிகள் எத்தனையென்று
எண்ணிப்பார்ப்பதும் பிடிக்கும்

இதயத்தின் ஓசையை இசையில்லாமல்
கேட்டுக்கொண்டிருக்கவும் பிடிக்கும்

ஆழ்கடலின் ஆழத்தை விரல்களினால்
அளந்து பார்க்கவும் பிடிக்கும்

அவசரமாய் மறையும் சூரியனை
அசையாமல் பார்க்கவும் பிடிக்கும்

நட்சத்திரங்களை நாள்தோறும்
நலம் விசாரிப்பதும் பிடிக்கும்

நகர்ந்து போகும் சாயங்கால மனிதர்களுடன்
நேரம் கடத்துவதும் பிடிக்கும்

நாள் முழுக்க சிரித்துக்
கொண்டே இருக்கவும் பிடிக்கும்

நகக் கண்களில் அந்த முகம்
பார்த்துக் கொண்டிருக்கவும் பிடிக்கும்

ஒற்றை மழைத்துளி நெற்றிப்பொட்டினில்
சட்டென விழுவதும் பிடிக்கும்

கற்றைக் கூந்தலில் வெண்ணிற மல்லிகை
நெளிந்து புரள்வதும் பிடிக்கும்

மழைத்துளியினால் பிறக்கும் மண்வாசம்
சுவாசிக்கும் நெஞ்சமும் பிடிக்கும்

சிறு உளியினால் பிறக்கும் பொன்சிலை
பார்க்கும் கண்களும் பிடிக்கும்

வந்தே மாதரம் கேட்கும் போதெல்லாம்
சிலிர்க்கும் முடிகளும் பிடிக்கும்

வணக்கம் என்று இனிதாய் சொல்லும்
என் மனிதனின் மொழியும் பிடிக்கும்

வாழ்க்கையின் ஒரத்தில் பயணம்
செய்து பார்ப்பதும் பிடிக்கும்

வசந்ததின் நிழலில் நான் மட்டும்
தனியாய் வாழ்ந்து பார்ப்பதும் பிடிக்கும்.


-பிப்ரவரி 1999

0 Comments:

Post a Comment

<< Home