Wednesday, September 30, 2009

காமம் கவிழும் இரவு

விழிகள் நான்கும்
விடிகின்ற வரை எரியும் நிலவு!

விரல்கள் அனைத்தும்
வழி தேடி அலையும் அரவு!

உதட்டு முத்தம்
உயிரை உலுக்கி கத்தும்!

எச்சில் திரவம்
காமம் வளர்க்கும் திராவகம்!

வீழ்ந்திருந்த குதிரை
சூழ்ந்திருக்கும் இருளில்
விடை தேடி அலையும்!

மேலிடை படர்ந்து
மேனி நடுங்கி
பெருமழையில் நனையும்!

கால்கள் பின்ன
கழுத்து நரம்பு துள்ள
நா உலர
உடம்பும் துடிதுடிக்கும்!

கண்கள் மின்ன
கவிதை பூ பூக்க
காமம் படர
நெஞ்சமும் படபடக்கும்!

மீண்டும் மீண்டும்
பருகத் துடிக்கும்
அற்புத அமுதம்!

மீண்டு வந்தாலும்
மீள முடியாத
ஆல கால விஷம்!

Labels:

Wednesday, March 05, 2008

உழைப்பு

மாடுகளைப் போல் உழைத்தாலும்

மனிதர்கள் சேர்த்து வைப்பதென்னவோ

வறுமையும் அதை தாங்கி வாழும் பொறுமையும்தான்!!!

Friday, July 06, 2007

காணாமல் போனவர்கள்

அடுத்த வேளை
சோற்றுக்கான
தேடுதலிலேயே
பெரும்பாலான
மனிதர்களின்
மொத்த வாழ்க்கையும்
தொலைந்து போய்விடுகிறது..........
என்னையும் சேர்த்து!

Wednesday, May 23, 2007

பிடிக்கும் என்பதால் பிடிக்கும்

வெய்யிலோடு பெய்யும் மழையில்
நனைந்திருப்பதும் பிடிக்கும்

வெண்ணிலவோடு வழியும் இரவில்
விழித்திருப்பதும் பிடிக்கும்

கள்ளிப்பூக்களைப் பார்த்துக் கொண்டே
கவிதை படிப்பதும் பிடிக்கும்

கண்களை திறந்து கொண்டே
கனவு காண்பதும் பிடிக்கும்

இமைகளின் முடிகள் எத்தனையென்று
எண்ணிப்பார்ப்பதும் பிடிக்கும்

இதயத்தின் ஓசையை இசையில்லாமல்
கேட்டுக்கொண்டிருக்கவும் பிடிக்கும்

ஆழ்கடலின் ஆழத்தை விரல்களினால்
அளந்து பார்க்கவும் பிடிக்கும்

அவசரமாய் மறையும் சூரியனை
அசையாமல் பார்க்கவும் பிடிக்கும்

நட்சத்திரங்களை நாள்தோறும்
நலம் விசாரிப்பதும் பிடிக்கும்

நகர்ந்து போகும் சாயங்கால மனிதர்களுடன்
நேரம் கடத்துவதும் பிடிக்கும்

நாள் முழுக்க சிரித்துக்
கொண்டே இருக்கவும் பிடிக்கும்

நகக் கண்களில் அந்த முகம்
பார்த்துக் கொண்டிருக்கவும் பிடிக்கும்

ஒற்றை மழைத்துளி நெற்றிப்பொட்டினில்
சட்டென விழுவதும் பிடிக்கும்

கற்றைக் கூந்தலில் வெண்ணிற மல்லிகை
நெளிந்து புரள்வதும் பிடிக்கும்

மழைத்துளியினால் பிறக்கும் மண்வாசம்
சுவாசிக்கும் நெஞ்சமும் பிடிக்கும்

சிறு உளியினால் பிறக்கும் பொன்சிலை
பார்க்கும் கண்களும் பிடிக்கும்

வந்தே மாதரம் கேட்கும் போதெல்லாம்
சிலிர்க்கும் முடிகளும் பிடிக்கும்

வணக்கம் என்று இனிதாய் சொல்லும்
என் மனிதனின் மொழியும் பிடிக்கும்

வாழ்க்கையின் ஒரத்தில் பயணம்
செய்து பார்ப்பதும் பிடிக்கும்

வசந்ததின் நிழலில் நான் மட்டும்
தனியாய் வாழ்ந்து பார்ப்பதும் பிடிக்கும்.


-பிப்ரவரி 1999

Tuesday, May 22, 2007

பிஞ்சுகள்

கருக்கல்ல எந்திருச்சு சோம்பல் முறிச்சா சொடக்கு வந்துரும்
ஓலப்படல்ல ஒண்னுக்கு போகீலயே நொண்டியோட சத்தமும் வந்திரும்
அவங்கூட குட்டைக்கு போனா காத்தால “வேல”யும் முடுஞ்சுடும்
கவிச்சிதீர குளிச்சுட்டு வந்தா சூரியனும் வானத்துல தெரிஞ்சுடும்

அந்நேரத்துக்கே அம்மாவும் தூக்கு போசில சோறுபோட்டு வெச்சிடும்
தின்னு திங்காம ஓடினா அஞ்சு நிமிச முன்னாடியே சங்கு ஊதிடும்
கும்பலாப் போவோம் என்னாட்ட வயசுப்பசங்க எல்லோரும்
முப்பது ரூவா கூலின்னு கொடுக்கறாங்க ஒவ்வொரு நாளைக்கும்

வேலையின்னு ஒக்காந்துட்டா வெரலெல்லாம் நடுக்க(ம்) எடுத்திடும்
நேரங் கொஞ்ச போனாலே பசியும் வயத்த கிள்ளிடும்
பதினோரு மணி வாக்குல மதியச்சோறு மணி அடுச்சுடும்
சோறு வயத்த நெறைக்குதோ இல்லையோ தண்ணி நெறச்சுடும்

சோத்துவேள முடுஞ்சு போனா முதுகெலும்பு முறிஞ்சுடும்
முகமெல்லா வேர்வத் தண்ணி கொத்தா பூத்து வழிஞ்சுடும்
எப்படியோ பல்லக் கடுச்சுக்கிட்டா வேல நேரமும் முடுஞ்சுடும்
வெளிய வரீலயே முப்பது ரூவாக் காசும் கையில கெடச்சிடும்

நேத்து நைட்டு வாங்குன பத்து ரூவாய நொண்டிக்கு கொடுக்கணும்
தங்கச்சிக்கு மறக்காம பஞ்சு முட்டா ரெண்டு வாங்கணும்
மீதிக்காச போன உடனே அம்மா கையில வெச்சிடனும்
இல்லாட்டி அப்பனும் அதப்புடுங்கி தண்ணி அடிச்சுடும்

சோக்காளிகளோட பேசிட்டு இருந்தம்னாலே சாயந்தரம் ஆயிடும்
சூரியனும் சாஞ்சுட்டா மனசுல எப்படியோ சந்தோசம் பூத்துடும்
ரவைக்கு அம்மாவும் சூடாக் கஞ்சி காச்சி வெச்சிடும்
குடுச்சுட்டு படுத்தா தூக்கமும் கண்ணு ரெண்டக் கவுத்துடும்

எல்லோரும் கூப்பிடறாங்க என்ன முருக சாமியின்னு
வர்ற சித்தரையோட எனக்கும் வயசாகுது பதினொன்னு!

-- மார்ச் ‘99

Thursday, May 10, 2007

வாசம்

மண்தொட்ட நாட்களில் சுவாசத்தில் தாய்ப்பால் வாசம்
முகமெங்கும் முட்டிமோதும் அம்மாவின் மஞ்சள் வாசம்

ஊருக்கு போகையில் அருகில் அப்பாவின் முரட்டுகதர் வாசம்
ஊரெல்லாம் பேசும் அடுத்த வீட்டு "பாயின்" அத்தர் வாசம்

பள்ளியில் வகுப்பெங்கும் வீசும் டீச்சரின் பவுடர் வாசம்
எப்போதாவது ஞாபகம் வரும் தாத்தாவின் புகையிலை வாசம்

"டொக் டொக்" சத்தமாய் கலைக்கும் பாட்டியின் வெத்திலை வாசம்
சரசர வென்று வளைய வரும் அத்தையின் புதுப்புடவை வாசம்

மனசெல்லாம் சாரலடிக்கும் வானத்தின் மழை வாசம்
மகிழ்ச்சியாய் சிரித்து வரும் குழந்தையின் மழலை வாசம்

பிரித்தவுடன் தவழ்ந்து வரும் புத்தகத்தின் பழைய வாசம்
பிரிந்தவுடன் காற்றிலடிக்கும் நண்பர்களின் சிகரெட் வாசம்

முன்சீட்டில் முகம் தெரியாத பெண்ணின் விநோத வாசம்
எதிர்பாராமல் இடித்துப்போகும் தேவதையின் வியர்வை வாசம்

மாதமுதல் தேதியில் வரும் மஞ்சத்தின் மல்லிகை வாசம்
முத்தம் கொடுக்கும் போது வீசும் மூச்சில் முகவாசம்

மார்கெட் தெருவில் மனைவியுடன் சுமந்திருக்கிறேன் மளிகை வாசம்
மனசெங்கும் மின்னலடிக்கும் அந்த மாத "பட்ஜெட்" வாசம்

ஆயிரம் நிகழ்ச்சிகளில் அவசரமாய் அடித்துப்போகும் "துக்க" வாசம்
ஆனாலும் என் வசமாய் அவளிருந்தால்
எனக்கும் பிடித்திருக்கும் இரவின் நிலா வாசம்

எத்தனையோ வாசங்கள்
இதயத்தின் வசந்தங்களில்!
வசந்தத்தின் வழிநடப்பில்
இறந்த பின்பும் நான் சுவாசித்திருப்பேன்
ஆம்
மண்வாசத்தை!!!

Thursday, December 14, 2006

அது

"அது"
ஒரு நிர்வாணக் கவிதை.

உதிர்ந்த பனி பூக்களினால்
நெய்யப்பட்ட பார்வை.

நினைவுகளில் மின்னல்
இதயத்தில் வசந்தம்

நிர்மூலம் நிரந்தரமாகின்றது
'அது' வின் வாழ்க்கைப் பிரதேசத்தில்!

மனம் நிர்வாணம்
மழை நிர்வாணம்
வானம் நிர்வாணம்
சுவாசம் நிர்வாணம்
ஆம் 'அது' வும் தான்!

சுவடுகளில் முகடுகள்
தேடியே ஒரு சொர்க்கம்
ஓட்டைப் பந்தலில் ஒட்டடை வானம்
பார்த்தே வாழ்க்கை
கனவுப் பள்ளத்தாக்கில்
கற்பூரமாய் ஞாபகங்கள்.

ஒற்றைப் பனையோரம்,
ஒளிந்திருக்கும் மலையோரம்,
ஆற்றுக்கரையோரம்
அதன் முகம்
என்றுமே
நிர்வாணத்தின் நிர்வாணமாய்!

ஆம்
'அது'
ஆழ்மனதின் ஆதங்க வெளிப்பாடு!

(1997)