Friday, September 22, 2006

செருப்புகள்

நரிக்கல்பட்டி சந்தையில தோலு வாங்கி
நாடாரு கடையில கவுறு வாங்கீலையே
"சர்ரக் சர்ரக்" சத்தந்தேந் மனசுக்குள்ளே!

ஊசிக்கு கூரு புடிக்க மாட்டுக்கொழுப்பு
தீந்திருச்சுன்னு உக்காந்தேந்!
நல்ல வேள சேதி வந்துச்சு
நாயக்கரு செவல செத்துப் போச்சுன்னு!

தோலுக்கு தோலாச்சு!
சட்டி நெறைய கறியுமாச்சு!
கொழம்போட சோறு துன்னுட்டு உக்காந்தா
கண்ணு காதெல்லா(ம்)
சத்தந்தே(ந்)!
"சர்ரக் சர்ரக்"!

காலுக்கு அளவெடுத்து
கணக்கா தோலுபோட்டு
மேலுக்கு அரிக்காத
ரத்த கலரு செருப்பு!

டயரு மேல டயரு வெச்சு
நாடாரு கட நூலு மேல
நூலு போட்டு மச்சூடு போலச்செருப்பு!

செஞ்சுட்டு போட்டு பாக்கீல
செவல நாயக்கரு வந்தாரு. என்றா!
வேலா.....ஆ செருப்பு நல்லாருக்கு
நாந்தொட்டுட்டு போறேன்னாரு.

செருப்போட அவரு போகீல
கூடவே எம் மனசும்
"சர்ரக் சர்ரக்" சத்தத்தோட!

(பிப்ரவரி 1998)

Thursday, September 21, 2006

விரிசல் விழுந்த வானம்

கண்களில் கொள்ளை
மின்னல் தெளித்து
கன்னங்கள் சிவக்க
முத்தங்கள் கொடுத்து
காதல் சொன்னாய்!
கனவிலா! இல்லை
நிஜமாய் தான்.

என் வானத்தின் அந்தப்புரத்தில்
மழை பெய்த சந்தோசம்!

சொல்லும்போது குவிந்த உன்
உதடுகளின் நளினம்
என் நினைவுகளில் என்றுமே
மறக்க முடியாத புதினம்

உனைப் பார்க்க வரும்போது
ஏற்பட்ட காதலின் சலனம்
பார்த்த பின்பு அடங்கிப்போகும்
முகத்தினில் இரவின் மெளனம்

தலைசாய்த்து கண்கள் மூடி
கொடுத்திடும் உதட்டு முத்தம்
தலைசாய்ந்து போனாலும்
கண்ணடிக்கும் அதன் சத்தம்

சேலைகட்டி இடைசாய்த்து
என்முன் நடந்த நாட்கள்
என் வாழ்க்கையின் மறக்க முடியாத
வண்ணத்துப்பூச்சி நாட்கள்

திருவிழாவாய் உலாவந்த
நம் காதலுக்கு உணர்வளித்தாய் (உன்)
திருமணத் திராவகம்
ஊற்றியல்லவா என் உயிர்பறித்தாய்!

நாள்பார்த்து நான் பார்த்த நாட்காட்டியின்
நாள் பக்கங்களை எனக்கு முன்பே
கிழித்துவிட்டாய்!

என் வாழ்க்கையின் அத்தியாயங்களுக்கு
அர்த்தம் தந்த நீ ஏன்
அவசரமாய் அழித்துவிட்டாய்!

என் வானத்தில் பூக்க
இன்னொரு பூவுமில்லை!

என் கவனத்தில் வருவதற்கு
இன்னொரு பெண்ணுமில்லை!

என் வானம் கண்ணீரில்
நனைந்து போனது!

உன் நினைவினால்
வறண்டு போனது!

நீயில்லாததால்
விரிசல் விழுந்த வானமாய்
இருண்டு போனது.

என் வண்ணத்துப்பூச்சி நாட்கள் போதும்
என் வாழ்க்கையின் அந்திமம் வரைக்கும்!


Tuesday, September 19, 2006

மழைக்குருவிகள்

மழராசா வந்துட்டாலே ஓட்டக்
குடிச ஒடப்பெடுக்கும்.

நிக்கிற எடத்திலியும் ஓத(ம்)
வந்து எலும்பொடைக்கும்.

ஒழுகிற தண்ணிக்கு வெக்க
வொரு பண்டமில்ல.

நனஞ்சு போகுமத்தினியும்
நல்ல வேல புள்ளையில்ல.

குளிருக்கூதலுக்கு குந்த
வொரு இடமில்ல.

கொஞ்ச நேர ஒறங்கலாம்னா
கிழிஞ்ச பாயி ஒன்ணுமில்ல.

என்னைக்குஞ் எஞ்சாவடிராசா
இன்னைக்கு மூலைல
மொடங்கிறுச்சு.

ரவைக்கு வெளக்கணச்சே(ன்)
கொஞ்சரதுக்கு நேரங்
கெடச்சிறுச்சு.

பக்கத்துல படுத்துக்கிட்டே(ன்)
சாராயங் கொடலப்
பொறட்டிடுச்சு.

இருந்தாலு(ம்)

கெட்டிப் புடுச்சுக்கிட்டே(ன்)!
குளிரிலியும் மொக(ம்)
வேர்த்திருச்சு!

(நவம்பர் 1997)

வதம்

அழகான
பெண்களெல்லாம்
வயதானவர்களுக்கே
வாழ்க்கைப்படுகிறார்கள்
இறக்கைகள்
பிய்த்தெறியப்பட்ட
வண்ணத்துப்ப்பூச்சிபோல!....


(நண்பனின் வீட்டிற்காக மதுரை சென்றபோது பார்த்தது)

Sunday, September 17, 2006

ஒரு பூவின் வாசம்

முன்பெல்லாம் நீ அப்படிப்
பார்த்ததில்லை.
இப்போது மட்டுமென்ன
என்னுள்
ஏதாவது
புதியவன் கிளர்ந்திருக்கிறானா?

நீ
பார்க்கும் போது
என்னுள் ஒரு வெடவெடப்பு
பாதங்களிலிருந்து
மூளைவரை
கூச்ச ஊசி.

உன்னை
அவ்வப்போது
பார்க்க நேரிடும்போது
பருவத்தின்
குறுகுறுப்பு
என்னில்…

ஓரக்கண்ணால் நீ பார்ப்பதும் சுகம்
ஒழுங்காய் நீ நடப்பதும் சுகம்
தெருவில் விழிகள் மோதிக்கொள்வதும் சுகம்
தென்றலில் முடிகள் கலைவதும் சுகம்
புதையலை புடவை சுமப்பதும் சுகம்
பூக்களை காம்பு தாங்கியிருப்பதும் சுகம்
தொடாமல் வேண்டுமென்றே தொடுவதும் சுகம்
படாமல் வேண்டுமென்றெ படுவதும் சுகம்

இருவரும் ஒரே நேரத்தில்
முகம் நோக்குவதிலும் கண் தாழ்த்துவதிலும்
எனக்கு வெட்கமாய் இருக்கின்றது.
தூரத்தில் நீ பார்க்காமல் பார்க்கும்போது
என்னுள் நான்
இதயத்தின்
மென்மையான பிரதேசங்களில்!

ஏதோ ஒரு வித மோனம், கலக்கம்.
ஒருநாள் கூட இப்படியானதில்லை.
ஒவ்வொரு நாளும்
உள்ளப் பதைபதைப்பு
உன்னை பார்க்கவேண்டுமென்று
ஓர் உற்சாகம்
உன் முகம் என் கண்ணில் நிழலாடும்போது!...

(செப்டம்பர் 1997)

Saturday, September 16, 2006

உயிர் நடுக்கம்

பூக்களின் விரிதலாய்
முகம்
பார்க்கத் தொடங்கியபோது
இதயத்தின் துளைகளில்
புகுந்த காற்று
மீட்டும்
புல்லங்குழலாய்
அதிரத்தொடங்கியது
குருதியோட்டத்தின்
மொத்தமண்டலமும்!

வண்ணங்கள்
ஒட்டும்
வண்ணத்துப்பூச்சியின்
இறகுகள் போல்
நினைவுக் கதிர்கள்
சுடும் சுவடுகள்
கனவுகளின்
ஒவ்வொரு
இடுக்குகளிலும்!

மினுங்கிப்போகும்
மின்மினி
தெளித்துப்போகும்
கண்களின் இதம்
தண்ணீர் குளத்தில்
வைத்த கால்
பருகும்
குளிர்மையின் வெம்மை!

பூக்களின் காம்புகள்
உதிர்க்கும்
மகரந்தம்
தடவிச் செல்லும்
காற்று பட்டு
தலையாட்டும்
காட்டாற்றோர
நாணல்களின் சிலிர்க்கும்
முதுகுத்தண்டு
வளைத்தொடிக்கும்
இதழ்களின் ஓரத்தில்
உதிர்ந்தோடும்
புன்னகை!

வளைவான அலைகளின்
வசம்
வாசம் கொள்ளும்
படகின் நிலையாய்
இதழ்களின் வளைவான
ஓரத்தில்
ஒட்டிக்கொண்ட
ஒரு துளி சிவப்பு
மச்சம்
உதடுகளுக்கிடையில்
கடிபடும்போது
கண்களில் வீழ்ந்த
மண்துகளின்
நெருடலாய்
நடுங்கித்தான்
போகிறது
உயிர்!

Friday, September 15, 2006

காமம் பற்றிய சிறுகுறிப்பு

கதவடைத்து
முகத்திலறைந்து
போகும் காற்று
உள்ளம் கலைத்து
மோகம் கிளப்பி
காமம் பீறிட்று…..

மதயானை புகுந்ததுபோல்
துள்ளிய உடல்
கண்கள் உள்வாங்கி
காதடைத்து
கரும்புக் காட்டை சேதம்
செய்தடங்கியது.

Tuesday, September 12, 2006

ஆண் மகன்

எதிர் செல்லும்போது
முகம் நோக்காமல்
முலைகள் நோக்கி
நாவினால்
உதடுகளை தடவி
நாயின் நக்கலாய்
எச்சில் வழிய
ஆடையுரித்து
அம்மணமாக்கி
கண்களால் புணர்ந்து
அவசரமாய்
தொடையிடுக்கில்
கைவைத்து
விறைக்கும் குறியினை
அழுத்திப்பிடிக்கும்
பரதேசிகள்!

தூ !
ஆண்களாம் இவர்களும்…..

ஆண்குறி
இருப்பவனெல்லாம்
ஆண்மகனல்ல!