Tuesday, October 17, 2006

ஒரு மழைநாளின் இரவு

மழை விட்டுப் போயிருந்தது
நீண்ட இரவின் நிசப்தம்
வானமெங்கும்.

மரத்தின் நழுவிய இலை
முகத்தில் பட்டு விழுந்தது.

சற்றுமுன்பு பெய்த மழைநீர்
கால்களில் நழுவிச் செல்கிறது.

நெடுநேரமாய் தூக்கமில்லை.

ஆங்காங்கே தெருவிளக்குகள்
அழுது கொண்டிருக்கிறது.

எதிர்வீட்டு குழந்தை இரவின்
மொளனத்தை களைந்து கொண்டிருக்கிறது.

எப்போதாவது ஒரு சிலர்
நடந்து போய்கொண்டிருக்கிறார்கள்.

கடந்து போன நாட்கள்
நடந்து போன பாதைகள்
நினைவெல்லாம்.

மழைக்காலத்தின் வெயில்போல்
சில நாட்கள்
வெயில்காலத்தின் மழைபோல்
சில நாட்கள்
கள்ளிப்பூவின் நிறம்போல்
சில நாட்கள்
கடலில் வந்துபோகும் அலைபோல்
பல நாட்கள்

மனதின் ஓரத்தை மயிலிறகால்
வருடிவிட்டுபோகும் நாட்கள்.

தடதடத்துப்போகும் இரயில்போல்
அம்மாவின் கூப்பிடும் சப்தம்

என்னால்தான் எழுந்து போகமுடியவில்லை.

இரவின் இதம்
என் மனதின் சுகம்
லேசான தூரல் மீண்டும்!

எழுந்து போகாமல் எழுந்து போனேன்....

என் மனசு மட்டும் இன்னும்
வெளியிலேயே நனைந்து நிற்கிறது.
அம்மா காலையில் போட்ட
அழகான கோலம் போல!!!!!

Wednesday, October 11, 2006

ஆனாலும்...

வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில்
நீ வந்த போது
எனக்கொன்றும் தெரியவில்லை.

வீதியின் புழுதி படர்ந்த தெருக்களில்
ஓடிப்பிடித்து விளையாடிய போது
அவ்வளவாய் விவரமில்லை.

தொட்டாங்குச்சி நாட்களில்
முள்மர இலைகள் சோறானபோது
நடைமுறைகள் ஞாபகமில்லை.

என்னுடன் உன்னை விளையாட
வேண்டாமென்று உன் அம்மா தடுத்தபோது
எனக்கொன்றும் புரியவில்லை.

என் துணையுடனே நீ வந்து
கல்லூரி முடித்த போதும்
நமக்குள்ளே நட்புமில்லை.

இருந்த காசெல்லாம் போட்டு
உன் திருமணத்திற்கு வந்த என்னை
நீ பார்க்கக் கூட நேரமில்லை.

ஒரே வீதியில் அரை நூற்றாண்டு வாழ்க்கையில்
என் மகனுடன் உன் பேரனை
கூட்டி வரும் போதும் உன்னிடம் புன்னகையில்லை.

சந்தர்ப்ப வசமாய் உனக்குதவ
நேரிடும் போதும் உன்னிடத்தில்
பெரியதொரு சந்தோசமில்லை.

எப்படியிருந்து பார்த்தாலும்
என் மனைவியைவிட நீ
அப்படியொன்றும் அழகில்லை.

ஆனாலும்

எனக்கு ஏனோ உன்னை
பிடித்திருக்கிறது என்றுதான்
எனக்கும் புரியவில்லை!!!

Wednesday, October 04, 2006

அந்தி மந்தாரை

அவசரமா எந்திருச்சு
தீக்குச்சி ஒறச்சா அடுப்பெரியும்
சட்டியில சோறும் வேகும்

உடம்பரிச்சா குளிப்பு
இல்லாட்டி ஒரு நெளிப்பு

வெளிக்கு போயி விறகொடுச்சு
வந்தா வெடிஞ்சு போகும்
வெம்பாவும் தொலஞ்சு போகும்

காட்டு வேலைக்கு சத்த(ம்) வரும். நேரங்
கழிச்சு போனா குத்த(ம்) வரும்

ஒடஞ்ச கண்ணாடியில ஒட்டுமொக(ம்) பாத்து
சீவவே தனி சொகம்
வாசப் பவுடர் போட்டு
சோற எறக்குனா வேத்துக் கொட்டிடும்
சிங்காரமும் கலஞ்சுடும்

அவசரமா ஓடிப்போயி
காட்டுல குமுஞ்சா முதுகொடிஞ்சுடும்
கண்ணாமுழி நட்டத்துல திருகிடும்

சாயங்காலமான அந்தி செவந்திடும்
புண்ணால கணுக்காலு(ம்) செவந்திடும்

ஓடிவந்து ஓஞ்சு படுத்தா சொகமாகும்
ஒரு டம்ளர் சுடுதண்ணியே மருந்தாகும்

அப்புறமா அடுப்படி! அவரோட நெருக்கடி!!!

எல்லா(ம்) முடிச்சா தூக்க(ம்) வரும்
நடுச்சாம தூக்கத்துல காத்தடுச்சாலும்
காம்பிலிருந்து விழாத
அந்தி மந்தாரப் பூ கனவுல வரும்!

Monday, October 02, 2006

ஆதலினால் ......... !!!

இப்போதெல்லாம்
இங்கே யாரும்
காதல்
செய்வதில்லை!
காதல்கள்
செய்கிறார்கள்!!!